திமுக ஆட்சியில் செயல்பாட்டுக்கு வராத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! ஆதாரத்துடன் அமைச்சர் கீர்த்தனா தாக்கு!
'தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட, 25 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை,'' என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குற்றம் சாட்டினார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) பலன் தரவில்லை என கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். கோவையில் நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தென்மண்டல கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தனா, “ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், செமிகண்டக்டர் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு வலுவான நிலையில் உள்ளது. ஒன்றிணைந்து செயல்பட்டால் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க முடியும்” என்றார்.
பின்னர் அளித்த பேட்டியில், “தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நேர்மையான சூழலை உருவாக்குவோம். பொத்தாம் பொதுவாக ஒப்பந்தங்கள் போடுவதில் பயன் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்தின் திறன்களை ஆராய்ந்து, அதற்கேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே எங்களது திட்டம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி நிறுவனங்கள்! சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!
தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க வந்தவர்களிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக பலர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா சுட்டிக்காட்டினார். “தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட 25 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்றுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை” என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “கடந்த 40 நாட்களில் மோதிலால், ஹூண்டாய், யூசங் உள்ளிட்ட மூன்று பெரிய நிறுவனங்களை நேரில் பார்வையிட்டோம். தொழில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை 100 சதவீதம் செயல்படுத்துவோம்” என்று உறுதியளித்தார்.
“இளைஞர்கள் ஹைதராபாத், பெங்களூருக்கு வேலை தேடிச் செல்லாமல், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவோம். மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை உயர்த்துவோம்” என அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக அரசு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய உத்திகளை கையாண்டு வருவதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டம் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!