×
 

2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு..!! மாநிலங்களவை எம்.பி.க்கள் குறித்த RTI தகவல்..!!

இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மத்திய அரசு 261 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் மாநிலங்களவை செயலகத்துக்கு RTI மூலம் 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் எம்.பி.க்களுக்கான செலவின விவரங்களை கோரினார். அதற்கு கிடைத்த பதிலில், 2024-25ல் படிகள் மற்றும் வசதிகளுக்கு மட்டும் 98 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும், 2025-26ல் இது 163 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 65 கோடி ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளத்துக்கு 25.71 கோடிக்கும் மேல், மருத்துவச் செலவுகளுக்கு 8.2 கோடி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணச் செலவுகளுக்கு 24.99 கோடி, படிகளுக்கு 33.33 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான 2025-26ல் சம்பளச் செலவு 44.6 கோடியாகவும், மருத்துவச் செலவு 9.6 கோடியாகவும், பயணச் செலவு 36 கோடியாகவும், படிகள் 58.78 கோடிக்கும் மேலாகவும் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், உள்நாடு-வெளிநாடு பயணங்கள், மருத்துவ வசதி, அலுவலகச் செலவுகள் உள்ளிட்ட மொத்தம் 21 வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. அச்சிடுதல், கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு, நிர்வாகச் செலவுகள் உள்ளிட்ட பல தலைப்புகளும் இதில் அடங்கும். இந்த வசதிகள் எம்.பி.க்கள் தங்கள் பணியை திறம்பட செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், நாட்டின் பொருளாதார நிலை கருத்தில் கொள்ளும்போது, மக்கள் பிரதிநிதிகளுக்கான செலவினங்களை மேலும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். RTI மூலம் இத்தகவல்கள் வெளியாவது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இந்த செலவுகள் மேற்கொள்ளப்படுவதால், ஒவ்வொரு ரூபாயும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: NEET விவகாரம் தீவிரம்... ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்! போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share