×
 

2025 ஏப்ரல் வரை.. 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்..!

2025 ஏப்ரல் வரை சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

குற்றவாளி கூறுகளுக்கு எதிரான தண்டணைகள்:

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் பிரத்யேக மண்டல அளவிலான சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களிலும், மாநகர ஆணையரகங்களிலும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றன. மாநகரங்களில் துணை காவல் ஆணையர்கள் (தலைமையகம்) மற்றும் மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையகம்) ஆகியோர் சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் நீதிமன்ற முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விசாரணையை விரைவுப்படுத்தி தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு அதிகபட்ச தண்டணை: 

விசாரணையின் முடிவுறும் தருவாயில் உள்ள நிலுவை வழக்குகள் மற்றும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2025-ம் ஆண்டில், இதுபோன்று 376 வழக்குகள் அவற்றின் விசாரணையை கூர்ந்து கண்காணிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டில், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டணை வழங்கப்பட்டு 150 சரித்திர பதிவேடு ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த 12 ஆண்டுகளைவிட மிக அதிக அளவாகும். இதுவரை (ஏப்ரல், 2025 வரை) சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மேற்கு மண்டலத்தில் திருப்பூர், தர்மபுரி, கோயம்புத்தூர் & கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் நகரம் ஆகியவற்றில் 5 வழக்குகள்; மத்திய மண்டலத்தில் பெரம்பலூர், மயிலாடுதுறை (3), திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் ஆகியவற்றில் 6 வழக்குகள்; தென் மண்டலத்தில் திருநெல்வேலி (5), தென்காசி, விருதுநகர் (3), தூத்துக்குடி (2), திண்டுக்கல் (2), ராமநாதபுரம் (3) & கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மதுரை நகரம் ஆகியவற்றில் 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

தென் மண்டலத்தில் சரித்திர பதிவேடு ரவுடி கொலைகளில் பொது விமர்சனங்களை ஏற்படுத்தும் வழக்குகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. இத்தகையை கொலை வழக்குகளை முறையாக கண்காணித்ததன் விளைவாக, 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

நீதிமன்ற வழக்கு விசாரணையை கண்காணித்தல் மற்றும் தண்டனை பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கொலைகள், குறிப்பாக சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழி கொலைகள் குறைவதற்கு முக்கிய பங்களித்துள்ளது. சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிக்குப் பழி மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் போன்ற பிற வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

தண்டணை வழங்கப்பட்ட முக்கிய வழக்குகள்: 

மதுரை: 

மதுரை மாநகரில் 8.7.2021 அன்று B4 கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பவ இடத்தில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக முருகன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கானது சொத்துக்களுடன் சேர்த்து 28 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், ஒரு கார் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 31.12.21 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலை வழக்கு உட்பட 29 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மற்றும் மதுரை மாநகர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு அவருக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை திறம்பட கண்காணித்ததன் காரணமாக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகர், திருநகர் காவல் நிலையத்தில் 12.10.2016 அன்று முன்விரோத வழக்கான பஷீத் அகமது (வயது 30) என்பவரது கொலை வழக்கு குற்றச்சாட்டில் தொடர்புடைய ராஜேஷ்(30) மற்றும் திரு. விஷ்வா(18) என்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி: 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்கன் மகன் பெருமாள் என்பவர், ராஜன் மகன் செல்வராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதில் வைகுண்டம் என்பவர் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்ற எட்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து வைகுண்டத்தைக் கொலை செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி 6.3.2025 அன்று செல்வராஜுக்கு மரண தண்டனையும், 4 கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். மீதமுள்ள 3 குற்றவாளிகளுக்கு 2 மாத சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் காவல் நிலைய எல்லையில் சுப்பையா(38) மற்றும் 20 பேர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக ரத்தினவேல் பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக அந்த காவல் நிலைய எல்லையில் பதிவான 5 கொலை வழக்குகளிலும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு ரவுடிகள் ராஜா, பிரகாஷ், சரத்குமார் ஆகிய 3 பேர் 2021-ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்தனர். இவ்வழக்கில் 5.4.2025 அன்று ராஜா மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ் என்பவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி: கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் காவல் நிலைய எல்லையில், முன்பகை காரணமாக காளிபாண்டி என்பவர் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் 16.4.2025 அன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்...அன்புமணி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share