நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?
கிருஷ்ணகிரியில் காரும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர், ஒருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்கு பதிவு செய்ய தங்கள் சொந்த ஊருக்கு காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் அதிகாலை 4 மணி அளவில் சென்ற போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது ,விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது, விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவயிடத்தில் பலியாகி உள்ளனர், ஒருவர் மட்டும் படுகாயமடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற உத்தனப்பள்ளி போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் காரில் இறந்தவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள
சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி அவரது உறவினர்களான பிரதீப் மற்றும் மாரி என தெரிய வந்தது. சதீஷ்குமார் (25) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாலை நடைபெற்றது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.