மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!
ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே தமிழகத்தில் வெயில் தகித்து வருகிறது. மே மாத தொடக்கத்தில் வெப்பம் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மூன்று நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்த நிலையில் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கரூர், பரமத்தி வேலூரில் தலா 100 டிகிரியாக வெப்பம் பதிவானது.
இந்த நிலையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நாகல் நகர், ஆரியம் காலனி, செட்டிநாயக்கன்பட்டி என்ஜிஓ காலனி, பேகம்பூர், சீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒட்டஞ்சத்திரம் ஜவ்வாதுப்பட்டி, அத்திக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை வெளுத்து வாங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. திம்பம் மலைப்பகுதி 24வது கொண்டை ஊசி வளைவில் கனமழையால் தண்ணீர் அருவி போல் கொட்டியது. திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் தாப்பேட்டையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. ஓசூரில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனிடையே இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குளுகுளுவென மாறப்போகும் 12 மாவட்டங்கள்..!! மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!!
மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!