ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. 30 இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் சீராக நடைபெறத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்த முக்கிய ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல்கள் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 30 இந்தியக் கப்பல்கள் ஏற்கெனவே பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இந்தியாவை நோக்கி வரும் மேலும் 26 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்காக காத்திருக்கின்றன. அதிகாரிகள் இந்தக் கப்பல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!
மார்ச் 1 முதல் ஜூன் 14 வரை தினசரி 10க்கும் குறைவான கப்பல்களே இந்த ஜலசந்தியைக் கடந்த நிலையில், ஜூன் 15 முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 22 சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்துள்ளன. இது கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வழிகளில் ஒன்றாகும். உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பகுதி இந்தப் பாதையின் வழியாகவே நடைபெறுகிறது.
குறிப்பாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்த ஜலசந்தி மிகவும் முக்கியமானது. கடந்த சில மாதங்களாக இங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இப்போது போக்குவரத்து சீரடைந்துள்ளதால், இந்தியாவுக்கு வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும், கப்பல் போக்குவரத்துத் துறையும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கப்பல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!