திமுக முக்கிய பிரமுகர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... 300 சவரன் நகைகள் அபேஸ்... நடந்தது என்ன?
ஏகேஎஸ் விஜயனின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீட்டை வீட்டின் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவமானது நடைபெற்றிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் டெல்லி பிரதிநிதியான ஏ.கே.எஸ் விஜயனின் வீடு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்கள் வீடு பூட்டி இருந்தது. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏ.கே.எஸ். விஜயனின் குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.கே.எஸ். விஜயன் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 300 சவரன் நகைகள் திருடு போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரொக்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் ஏதாவது திருடு போயுள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மோக்நாயக் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், கொள்ளையர்கள் எந்த வழியாக உள்ளே நுழைந்தனர்?, எப்படி தப்பிச் சென்றனர்? என்பது குறித்து வீடியோ காட்சிகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர்.
1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நாகை எம்.பி.யாக இருந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுகவின் முக்கிய பிரமுகர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் முக்கிய பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஏகே விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது தஞ்சை பகுதி மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.