×
 

கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதிய உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்திருந்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை உட்கொண்ட 34 மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே 34 மாணவர்களுக்குக் கடும் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் உணவில் பல்லி விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாகப் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக் கதவுகளைத் தட்டி ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, துணை ஆணையர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதிப் பள்ளிக் கதவுகள் மூடப்பட்டுள்ளதால், தங்களது பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் ஊழியர்களின் அஜாக்கிரதையே இதற்குக் காரணம் எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share