×
 

நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் 7 பேர் உயிழப்பு. தமிழ்நாட்டில் இருந்து மனகாமனா பார்வதி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய போது கோர விபத்து.

நேபாளத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பயணித்த மினி பேருந்து பயங்கர விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தின் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழகத்திலிருந்து 24 பேர் கொண்ட குழுவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து நேபாளத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர். அவர்கள் நேபாளத்தின் கோர்க்கா (Gorkha) மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மனகாமனா (Manakamana) தேவி கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மினி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாகித் லக்கான் (Shahid Lakhan) கிராமம் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுமார் 150 மீட்டர் (500 அடி) ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் விவரம்: முத்துக்குமார் (58), அண்ணாமலை (58), மீனாட்சி (59), சிவகாமி (53), விஜயாள் (57), மீனா (58), தமிழரசி (60)

பேருந்தில் இருந்த 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, சித்வான் (Chitwan) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அன்புகைரேனி (Anbukhaireni) மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான சாலைக் கட்டமைப்பு மற்றும் வளைவில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வர இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் இருந்து ஒரே குழுவாகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய செய்தி, அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 3-வது முறையாக விபத்தில் சிக்கிய தேஜஸ்..,! ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு பின்னடைவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share