×
 

சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்ததோடு, சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த நடவடிக்கையை சிபிஎம் (CPIM) கடுமையாகக் கண்டித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான 'ஜனநாயகப் படுகொலை' என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வரும் சூழலில், இன்று அரங்கேறிய அரசியல் மோதல் குறித்த விரிவான அறிக்கை வெளியிட்டனர்.

நேற்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முற்பட்ட போது, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இன்றும் அவர் எழுந்து பேச முயன்ற போது, அவருக்கு வாய்ப்பளிக்காமல் ஆளுங்கட்சி உறுப்பினரைச் சபாநாயகர் பேச அழைத்தார். இந்தத் தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து, சபாநாயகர் இருக்கை முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்ட காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீன ஆக்கிரமிப்பு: ஏன் பயப்படுகிறீர்கள்? நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேச கேள்வி!

நாடாளுமன்றத்திற்குள்ளேயே எதிர்க்கட்சித் தலைவரின் குரலை நசுக்குவதும், மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளைப் பறிப்பதும் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைக் குலைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இந்த அடக்குமுறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துச் சக்திகளும் இதற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நாடாளுமன்ற அவையைத் தர்க்க ரீதியாகவும் ஜனநாயகப் பூர்வமாகவும் நடத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


 

இதையும் படிங்க: 9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share