சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு.. 4 மொழிகளில் போஸ்டர்.. ரவுண்டு காட்டும் போலீஸ்..!
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமைறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க 4 மொழிகளில் போஸ்டர் அடித்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 8 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி தற்போது நலமாக இருப்பதாகவும், குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொடூரமாக சீரழிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி.. சிக்கியது சிசிடிவி ஆதாரம்.. பிடியை இறுக்கும் போலீஸ்..!
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து, 10 நாட்கள் ஆன நிலையில் இன்று வரை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளியை நெருங்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க போலீசார் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளியின் புகைப்படத்தை போட்டு, 4 மொழிகளில் போஸ்டர் தயாரித்து ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் 9952060948 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING 4 உயிர்களை காவு வாங்கிய வெடி விபத்து - பட்டாசு ஆலை உரிமம் தற்காலிக ரத்து...!