அதிமுக கவுன்சிலருக்கு ‘பளார்’ - திமுக பெண் கவுன்சிலர் ஆவேசம் - சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு!
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு
சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோட்டத்தின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி எழுந்து , கட்டிட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் , அவர் மீது பேப்பர் ஒன்றை தூக்கி எறிந்தனர். மேலும் திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து அவரிடம் வாக்குவாதம் செய்ய சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் திடீரென மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
இதையும் படிங்க: கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… மாலை வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறும்!!
மாநகராட்சி டெண்டர்களை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே எடுப்பதாக கவுன்சிலர் யாதவமூர்த்தி குற்றம் சாட்டிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் அவரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் ஏற்பட்டது.
திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!