சீனாவில் லேண்ட் ஆன பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியை கண்டு ரசிப்பு..!!
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பயணத்தை முடித்து, சீனாவின் தியான்ஜின் நகருக்கு (ஆகஸ்ட் 30) இன்று அரசு முறைப் பயணமாக சென்றடைந்தார். அவருக்கு தியான்ஜின் விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோடி சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
தியான்ஜின் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி, தொடர்ந்து தியான்ஜினில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு ரசித்தார். சீன நாட்டு கலைஞர்கள், பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜப்பானில் கால் பதித்தார் பிரதமர் மோடி!! டோக்கியோவில் பாரத் மாதா கி ஜெய் கோஷம்!!
இந்தப் பயணம், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. 2020-ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ மோதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே உறவு பதற்றமாக இருந்த நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
https://x.com/i/status/1961754169091703201
மோடியின் வருகை, இந்தியா-சீன உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய பிரதிநிதிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தப் பயணம், அமெரிக்காவின் வரி விதிப்பு நெருக்கடியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார சவால்களுக்கு மத்தியில், சீனாவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக அமையலாம். மேலும், எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தப் பயணம் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தெரிவித்துள்ளது. மோடியின் இந்தப் பயணம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார மேடையில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு முக்கியமான நகர்வாக உள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், இந்தியா-சீன உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம் என உலகம் உற்று நோக்குகிறது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! ஆகஸ்ட் 31ல் பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பு!