×
 

புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

'ஆதார் விஷன் 2032' (Aadhaar Vision 2032) திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்தியாவின் மிக முக்கியமான அடையாளச் சான்றாக விளங்கும் ஆதார் கார்டில் விரைவில் பெரிய அளவிலான மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை மேலும் பாதுகாக்கவும், தரவு கசிவு, அடையாளத் திருட்டு மற்றும் மோசடிகளைத் தடுக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த மறுவடிவமைப்பைத் திட்டமிட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள ஆதார் கார்டுகளில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் 12 இலக்க ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நேரடியாக அச்சிடப்பட்டிருக்கும். இதனால் ஹோட்டல்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சேவை மையங்களில் ஆதார் நகலை சமர்ப்பிக்கும் போது, தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகமாக இருந்து வந்தது. 

ஜெராக்ஸ் நகல்கள் மூலம் தனிப்பட்ட விவரங்கள் எளிதில் திருடப்படும் சம்பவங்களும் அடிக்கடி புகாராக எழுந்தன. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆதார் விஷன் 2032 என்ற நீண்டகாலத் திட்டத்தின் கீழ் UIDAI புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஆதார் கார்டின் முன்புறத்தில் பயனரின் புகைப்படம் மற்றும் ஒரு பாதுகாப்பான, குறியாக்கப்பட்ட QR கோடு மட்டுமே இடம்பெறும். பெயர், முகவரி, பிறந்த தேதி, 12 இலக்க எண் உள்ளிட்ட எந்த தனிப்பட்ட விவரமும் நேரடியாக அச்சிடப்படாது.

இதையும் படிங்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

இதன் மூலம், ஆதார் கார்டை யாரிடம் வழங்கினாலும் அவர்களால் உங்கள் ரகசியத் தகவல்களை நேரடியாகப் பார்க்கவோ, நகலெடுக்கவோ முடியாது. அனைத்து விவரங்களும் QR கோட்டுக்குள் மிகவும் பாதுகாப்பான முறையில் குறியாக்கம் (Encryption) செய்யப்பட்டு சேமிக்கப்படும். சாதாரண கேமரா அல்லது அங்கீகரிக்கப்படாத ஆப்களால் இந்தத் தகவல்களைப் படிக்க முடியாது. அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்கேனர்கள், UIDAI-யின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அல்லது பதிவு செய்யப்பட்ட சரிபார்ப்பு சாதனங்கள் மூலம் மட்டுமே தேவையான விவரங்களை அணுக முடியும். 

இந்த முறை குறைந்தபட்ச தரவுப் பகிர்வு (Data Minimisation) கொள்கையை ஊக்குவிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட சேவைக்கு தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம்; முழு விவரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றம் இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) உடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

போலி ஆதார் உருவாக்கம், ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகளைத் தடுப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், காகித ஆவணங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, டிஜிட்டல் சரிபார்ப்பு முறையை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். UIDAI தலைவர் நீல்கந்த் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர் குழு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான ஆதாரின் வளர்ச்சிப் பாதையை ‘ஆதார் விஷன் 2032’ மூலம் வரையறுத்துள்ளது.

இந்த மறுவடிவமைப்பு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று. புதிய வடிவிலான ஆதார் கார்டுகள் டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஆதார் கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். இந்த மாற்றத்தால் ஆதார் இனி வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல், பயனரின் அனுமதியுடன் மட்டுமே செயல்படும் பாதுகாப்பான டிஜிட்டல் சாவியாக மாறும்.

தரவுப் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் புதிய தரத்தை எட்டும் இந்தப் புதுமை, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: “குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...” - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி 'ஸ்மார்ட்' கண்காணிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share