முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!
முதலமைச்சர் வருகையையொட்டி அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், சாலையின் பெரும்பகுதி பேரிகார்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டதால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்ததாக கூறப்படும் மாநில மத்திய ஆய்வக கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள தகவல் பலகையில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக, ‘அங்கீகாரம்’ என்பதற்கு பதிலாக ‘அங்கிகாரம்’ என்றும், ‘உற்பத்தியாளர்’ என்பதற்கு பதிலாக ‘உற்பத்தயாளர்’ என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வக கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்த நிகழ்ச்சியை முன்னிட்டு, அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் வருகையையொட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?
இதனால் வழக்கமாக பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிழற்குடைகளும் சில இடங்களில் பேரிகார்டுகளால் மறைக்கப்பட்டதாகவும், பயணிகள் நிழற்குடைகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்திற்கு அதிகாலை முதலே பால் மற்றும் ஆவின் பொருட்களை வாங்க பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக அதிகாலை 4 மணி முதலே வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளால் அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வக கட்டிடத்திற்கு எதிரே உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாடு பூங்காவும் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த சில மாடு சிலைகள் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், பூங்கா முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. பூங்காவை சீரமைப்பதற்கு பதிலாக சில பகுதிகள் துணிகளால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் வருகையையொட்டி அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், சாலையின் பெரும்பகுதி பேரிகார்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டதால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது திறப்பு விழா நிறைவடைந்துள்ள நிலையில், தகவல் பலகையில் காணப்படும் எழுத்துப்பிழைகள், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் ஆவின் வளாக பராமரிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!