×
 

நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

பெரும் நஷ்டத்தில் சிக்கியுள்ள 'ஆவின்' நிறுவனம், நுகர்வோருக்கான மாதாந்திர பால் அட்டை மானிய சலுகையை நிறுத்தும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர மானிய சலுகை நிறுத்தப்படலாம் என்ற தகவல் நுகர்வோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், பால் அட்டை திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், பால் விநியோகம் குறைக்கப்பட்டதாக வெளியான தகவல்களை ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சென்னையில் தினசரி 14 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சுமார் ஒன்பது லட்சம் பேர் மாதாந்திர பால் அட்டை திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கு ரூ.7, பச்சை மற்றும் ஊதா நிற பால் பாக்கெட்டுகளுக்கு தலா ரூ.1, நீல நிற பால் பாக்கெட்டுக்கு ரூ.1.50 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரை நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த மானியத்தை படிப்படியாக குறைக்க அல்லது நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: திவாலாகிறதா ஆவின்.? என்னென்ன முறைகேடுகள்.? வெள்ளை அறிக்கை வேண்டும்..! நயினார் வலியுறுத்தல்.!

குறிப்பாக, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கான மானியத்தில் முதலில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பால் அட்டை வழங்கும் பணிகளை குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக சில சில்லரை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களாக கடைகளுக்கு அனுப்பப்படும் பால் அளவில் மாற்றம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. வெளியிட்டுள்ள விளக்கத்தில், சென்னையில் பால் விநியோகம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்றும், தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது பால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குறிப்பிட்ட பால் வகையின் விநியோகமும் குறைக்கப்படவில்லை என்றும் ஆவின் விளக்கம் அளித்துள்ளது. எனவே, மானியம் நிறுத்தப்படுவது மற்றும் விநியோகம் குறைக்கப்படுவது தொடர்பாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் வரை நுகர்வோர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் "GREEN MAGIC" நிறுத்தமா.? மக்கள் அதிர்ச்சி... தமிழக அரசு விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share