முக்கியமான லெவல் கிராசிங்... அதெல்லாம் சரி சிக்னலோட ஏன் இணைக்கல? சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி..!
முக்கியமான லெவல் கிராசிங் எனத் தெரிந்தும் சிக்னலோடு இணைக்கப்படாதது ஏன் என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன்மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஓட்டுனரும் மற்றொரு மாணவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கேட் கீப்பர் மீது அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
மேலும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஓட்டுநர் தான் ரயில்வே கேட்டை திறந்துvaவிட சொன்னதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கூறியிருந்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கேட்டை திறக்க சொல்லவில்லை என்றும் அவரை பார்க்கவே இல்லை எனவும் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்திருந்தார். விபத்து நடந்த பிறகு கூட கேட் கீப்பர் அந்த இடத்திற்கு வரவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று வேனில் பயணித்த மாணவர் ஒருவரும் அடுத்த நிறுத்தத்தில் அந்த வேனில் பயணிக்க இருந்த மாணவர் ஒருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெறி பிடிச்ச பாஜக... தமிழ் ஓட்டுக்கு! சமஸ்கிருதம் நோட்டுக்கா? சு.வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு..!
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக விளக்கமளித்த ரயில்வே துறை, இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு இரண்டரை லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அது மட்டுமில்லாமல் அந்த பகுதியில் தரைப்பாலம் ஒன்று அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒரு வருடமாக அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் ரயில்வே நிர்வாகம் முன் வைத்திருந்தது.
இதனை சுட்டிக்காட்டி எம்.பி சு.வெங்கடேசன் பேசி உள்ளார். முக்கியமான லெவல் கிராசிங் என்பதால் சுரங்கப்பாதை அமைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் ஒரு வருடமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டு இருப்பதாகவும் இந்த குற்றச்சாட்டு குறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவ்வளவு முக்கியமான லெவெல் கிராசிங் என தெரிந்தும் அது சிக்னலுடன் ஏன் இணைக்கப்படவில்லை என்பதற்கு தெற்கு இரயில்வே பதில் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கேட் கீப்பர் தான் விபத்துக்கு காரணம்.. ஓட்டுநர், மாணவர் பகீர் வாக்குமூலம்..!