ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற ரயிலில் செல்லக் கட்டணச் சலுகை வழங்கும் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
ஆசிட் (அமில) வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று உயர்தர மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக, அவர்கள் ரயில்களில் பயணம் செய்யும்போது கட்டணச் சலுகை வழங்கும் கொள்கையை உருவாக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பு ரயில் கட்டணச் சலுகை மற்றும் அவசரப் பயண இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி 'அடி ஜீவன் சொசைட்டி' என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!
இவ்வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அர்ச்சனா பதக் டேவ் வாதிடுகையில், "ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் சேர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'நோயாளிகள் பிரிவு' (Patients Category) மூலமாகவே ரயில் பயணக் கட்டணச் சலுகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இருப்பினும் மனுதாரர் தரப்பில், "பாதிக்கப்பட்டவர்கள் கண் சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை எனப் பல்வேறு மாநிலங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தொடர் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவது நடைமுறையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்" எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், "ஆரம்பகட்டமாக ஒரு ஆண்டு காலத்திற்குச் செல்லுபடியாகும் வகையில் குறிப்பிட்ட சலுகைச் சான்றிதழை வழங்கி, அந்த காலகட்டத்தில் சிகிச்சைக்காக அவர்கள் எங்குப் பயணித்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிய விதிமுறைகளை உருவாக்கலாம்" என யோசனை தெரிவித்தார். மேலும், அவசர மருத்துவச் சிகிச்சைக்காகப் பயணிப்பவர்களுக்கு ரயில்களில் 'அவசரப் பயண ஒதுக்கீடும்' (Emergency Quota) வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, புதிய கொள்கைக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை இறுதி செய்வதற்கு மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தயார் செய்யப்படும் வரைவுத் திட்டத்தை முதலில் மனுதாரர் அமைப்பிடம் பகிர்ந்து அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!