×
 

அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!

புதுச்சேரியில் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 9, 2026) அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன், கேமரா உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் சாதனங்களையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை மீறி சில வாக்காளர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியின் விசில் சின்னத்துக்கு வாக்கு அளித்த பின்னர், வாக்குப் பதிவு இயந்திரத்தில் (VVPAT) அந்த விசில் சின்னம் தெரியும் வரை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் வேகமாக வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். வாக்குச் சாவடிக்குள் செல்போன் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் மட்டுமின்றி, ரகசிய வாக்குப் பதிவு கொள்கையையும் பாதிக்கும் சீரியஸ் விஷயமாகக் கருதப்படுகிறது. தேர்தல் நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், தேர்தல் ஆணையம் செல்போன் தடையை கடுமையாக அமல்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: புதுச்சேரி களத்தில் பதற்றம்: ஒருபக்கம் விறுவிறு வாக்குப்பதிவு..!! மறுபக்கம் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?

வாக்குச்சாவடி அதிகாரிகள், பறக்கும் படைகள் மற்றும் போலீஸார் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த மீறல் நடந்துள்ளது. இது தேர்தல் செயல்முறையின் நேர்மையை கேள்விக்குறியாக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் கட்சிகள் சில கருத்து தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பலரிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் கேட்டபோது, “சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை உன்னிப்பாக ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். வீடியோ பதிவு செய்து பகிர்ந்தவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் பயன்படுத்தினால், அது தேர்தல் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இத்தகைய செயல்கள் தேர்தல் நடைமுறையின் ரகசியத்தன்மையை சிதைக்கும் என்பதால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் புதுச்சேரி தேர்தல் செயல்முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த விதிமீறல் சம்பவம் தேர்தல் அதிகாரிகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒவ்வொரு வாக்கும் முக்கியம்! கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share