அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!
அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடிகர் சாந்தனு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். கடந்த மாதம் 27 ம் தேதி சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் காரில் கோவிலுக்கு வந்தார். அப்போது அஜித் குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்க் செய்யும்படி கூறியுள்ளார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் அவர் இன்னொருவரை உதவிக்கு அழைத்து காரை பார்க் செய்துள்ளார். அதன்பிறகு நிகிதாவிடம் கார் சாவி வழங்கப்பட்டது. அதன்பிறகு காரில் இருந்த 9.5 சவரன் நகை மற்றும் ரூ.2,500 காணவில்லை என கூறி நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் மாட்டு தொழுவத்தில் வைத்து கடுமையாக தாக்கியதோடு மிளகாய் பொடியால் சித்ரவதை செய்தனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!
இந்த சம்பவத்திற்கு பல்வவேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமார் கொலை தொடர்பாக நடிகர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், போலீஸ் காவலில் அஜித் குமார் இறந்திருப்தன் மூலம் மற்றொரு மனித உயிர் பறிபோயுள்ளது. அஜித்குமார் மரண விவகாரம் குறித்து தாமதாக பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
மற்றொரு சம்பவம், இன்னொரு உயிரிழப்பு என சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை'' என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அடித்து கொன்றனர். அப்போது அந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதை சுட்டிக்காட்டிதான் நடிகர் சாந்தனு, மற்றொரு சம்பவம், இன்னொரு உயிரிழப்பு. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!