×
 

மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய நடிகர் சிவகுமார், கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், கே.ஜி. மருத்துவமனை நடத்திய விழாவில் நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ், "தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், தொடக்கத்திலேயே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுங்கள்; அதன் பிறகு மற்ற பாடல்களைப் பாடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித மூடநம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும்; அதற்குத் தந்தை பெரியார் தான் முக்கியத் துணை. உறங்குவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டுவிட்டுப் படுத்தால் எப்போதும் தெம்பாக இருக்கலாம்" என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், "எனக்கு இப்போது 85 வயது ஆகிறது. காபி, டீ குடித்து 65 வருடங்கள் ஆகிவிட்டன. தினமும் யோகா செய்கிறேன். செல்போன்களை ஓரம் வைத்துவிட்டு, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பேச வேண்டும். தனிமை தான் மன அழுத்தத்திற்குக் காரணம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மருத்துவர்களே தேவை இல்லை" என்று கூறி சில யோகா பயிற்சிகளையும் செய்து காட்டினார்.

இதையும் படிங்க: 10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

தற்போதைய தேர்தல் முடிவுகள் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்த கேள்விக்குச் சிவகுமார் பதிலளிக்கையில், "மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம். பெருந்தலைவர் காமராஜரையே மாற்றம் வேண்டும் என்று மக்கள் தோற்கடித்தார்கள். அதன் பிறகு திமுக 50 ஆண்டுகள் ஆண்டது. தற்பொழுது அதுவும் வேண்டாம் என்றுதான் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். விஜய் ஏதாவது வித்தியாசமாகச் செய்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் எப்போதும் நீதிபதிகள்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சத்யராஜ், "தற்போதைய அரசு பள்ளிகளுக்கு அருகில் இருந்த மதுபானக் கடைகளை மூடியுள்ளது நல்ல விஷயம்" என்றார். கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

இதையும் படிங்க: "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share