×
 
☰

#BREAKING செங்கோட்டையன் தலையில் இறங்கியது பேரிடி... அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக... உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...!

செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். தற்போது அவர் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிரபு, செங்கோட்டையன் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் சான்றளித்த நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகியிருந்ததாகவும், எனவே அந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது தவறு என்றும் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் செங்கோட்டையனின் வேட்புமனுவை நிராகரித்திருக்க வேண்டும் என்றும், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இதனிடையே, தனக்கு எதிராக பிரபு தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கோட்டையன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, பிரபு தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டு மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்த நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகியிருந்ததால், அந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது முறையற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நோட்டரி சான்றளிப்பு முறையாக இல்லாத நிலையில், செங்கோட்டையனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இது தேர்தலின் அடிப்படையையே பாதிக்கும் விவகாரம் என்றும் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செங்கோட்டையனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து அந்தத் தேர்தல் வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பிரபு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாராபுரம் அரசியல் களம்..! தவெகவில் இணைந்த Ex.அமைச்சர் செம்மலை... கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற முதல்வர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share