×
 
☰

கடலூர் நகர்மன்றத்தில் பரபரப்பு.. விஜய் ஃபோட்டோவை அகற்றிய திமுக - அதிமுக கவுன்சிலர்கள்!! நடந்தது என்ன??

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் படத்தை அகற்றிவிட்டு புதிய படத்தை மாற்றக்கூடாது என அவர் எதிர்த்ததால் அங்கு சர்ச்சை கிளம்பியது.

கடலூர் நகராட்சி நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற சமீபத்திய கூட்டத்தில், முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் தொடர்பாக கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. பொதுவாக அரசு கட்டடங்களிலும் நகராட்சி அலுவலகங்களிலும் முதலமைச்சரின் படம் வைக்கப்படும் வழக்கம் உள்ள நிலையில், இங்கு வைக்கப்பட்டிருந்த விஜய்யின் படத்தை அகற்ற வேண்டும் என திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர் ஒருவர், “இங்கு தவெக கவுன்சிலர்கள் யாரும் இல்லாதபோது முதல்வர் படத்தை மாட்டக்கூடாது” என்று வாதிட்டார். இதற்கு ஆணையர், “இது அரசு கட்டடம். முதல்வர் என்ற முறையில் அவரது படத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை” என பதிலளித்தார். ஆனால் கவுன்சிலர்கள், “இது முழுமையாக அரசு கட்டடம் அல்ல; பொதுவான கட்டடம். உங்கள் அறையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அதிமுக கவுன்சிலரே அந்தப் புகைப்படத்தை அகற்றினார். இதனால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போன்ற சர்ச்சைகள் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கோவை மாநகராட்சியில் மேயர் அறையில் விஜய்யின் படத்தை வைக்க திமுக மேயர் ரங்கநாயகி மறுத்தார். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் படத்தை அகற்றிவிட்டு புதிய படத்தை மாற்றக்கூடாது என அவர் எதிர்த்ததால் அங்கு சர்ச்சை கிளம்பியது.

இதையும் படிங்க: கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

நெல்லை மாநகராட்சியில் முதல்வரின் படத்தை மேயர் இருக்கைக்கு நேரே மேலே வைக்க வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தியதால், மேயர் ராமகிருஷ்ணன் தனது இருக்கையில் அமர மறுத்து சோபாவில் அமர்ந்து பணியாற்றினார். குன்னூர் நகராட்சியில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பழைய படங்களை தவெகவினரின் புகாரை அடுத்து அதிகாரிகள் அகற்றியதால் வாக்குவாதம் முற்றி, போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

அரக்கோணம் மற்றும் கரூர் நகராட்சிகளிலும் முதல்வர் படங்களை வைப்பது தொடர்பாக இதேபோன்ற மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தொடர் சம்பவங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முதல்வர் படம் வைப்பது நடைமுறைக்குரியதா அல்லது கட்சி அரசியலாக மாறுகிறதா என்ற விவாதம் தொடர்கிறது.
 

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு..? சூடுபிடித்த அரசியல் களம்... உதயநிதி பிரச்சாரப் பயணம் விவரம் வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share