துஷ்ட சக்தி த.வெ.க. அரசு..! உயிருக்கு விலை வைக்கும் அவலம்... அதிமுக கண்டனம்..!!
தமிழக வெற்றிக் கழக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
திராவிட மாடல் என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைப்பதாகவும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசு என்றும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 'கோவில் காவலாளி அஜித்குமார்' முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் 'விக்னேஷ்', தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று, பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் முக்கியமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருசில பெருந்தலைகளைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அன்றைய அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'மாற்றம் கொண்டு வருவோம்' என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்த த.வெ.க. அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை' என்பதுபோல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், 'துஷ்ட சக்தி' ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று அதிமுக சாடியுள்ளது. 'யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்' அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' எங்களின் போக்கை யாரும் மாற்ற முடியாது என்ற இருமாப்போடு ஒருசில காவல் துறையினர் செயல்படுவதும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும், தொடர்கதையாகி வருவதாகவும் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விலை மதிப்பற்ற உயிர்களுக்கு - உயிரே உன் விலை என்ன? என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!
கரூர் சம்பவத்தை குறிப்பிட்டுள்ள அதிமுக, 'கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் - ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை' என்பதை, த.வெ.க. முதலமைச்சர் உணர வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: கூட்டுக் களவாணி பிளான் போட்டது நீங்க..!! கோடநாடு-ன்னா நடுங்குவீங்களே... இபிஎஸ்க்கு தவெக பதிலடி..!!