அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்வதில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிகளை இறுதி செய்து, தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலைமை, கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தல் தந்திரங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வர உள்ளார். அவர் தொகுதிப் பங்கீடு குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இபிஎஸ் டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை மொத்தம் 45 தொகுதிகளைக் கேட்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட 25 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கத்தை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை வடக்கு, உதகை, அவிநாசி, திருப்பூர், ஓசூர் தொகுதிகளையும் தென் தமிழகத்தில் நாகர்கோவில், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும் பாஜக கேட்கிறதாம். இதில் சில தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாகும். இதனை விட்டுக்கொடுக்க அதிமுக தரப்பிற்கு விருப்பம் இல்லாததால் அமித் ஷாவை நேரில் சந்தித்து தொகுதி எண்ணிக்கையைக் குறைக்கவும், சில தொகுதிகளை மாற்றி பெற்றுக்கொள்ளவும் இபிஎஸ் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!