×
 

திமுகவில் இணைந்தது வெட்கக்கேடான செயல்.. சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்..!! கே.பி முனுசாமி சாடல்..!!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பதை சுட்டிக்காட்டினார்.

"தனக்கு வாழ்வு தந்த கட்சியை மறந்து, சுயநலத்திற்காக திமுகவில் இணைந்துள்ளது வெட்கக்கேடான செயல்" என்று அவர் கண்டனம் தெரிவித்தார். ஓபிஎஸ்-ஐ "சுயநலத்தின் மொத்த உருவம்" என்று விளித்த அவர், அவரை ஒரு மனிதனாக பார்ப்பதற்கே வெட்கமாக இருப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் இணைய வேண்டும் என்ற கட்சி நடைமுறையை நினைவூட்டினார்.

"ஆனால் ஓபிஎஸ் தலைமைக் கழகத்தையே காலால் உதைத்தவர். மன்னிப்பு கேட்டு பொதுச்செயலாளருக்கு கடிதம் கொடுக்காமல் எப்படி இணைப்பு பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். திமுகவை "தீய சக்தி" என்று குறிப்பிட்டு, அதில் இணைந்தது கசப்பான நினைவாக இருக்க வேண்டும் என்றும் அவர் சாடினார். மேலும் தென் மாவட்டங்களில் அதிமுக வலுவாக உள்ளதாகவும், அங்கு கட்சி வளர்ச்சி அடைந்ததாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

"தென் மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை சர்வாதிகாரி என்று அழைப்பதை விமர்சித்தார். "அவர் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற போராடிக்கொண்டிருந்தார். எங்காவது பணியாற்றியதா?" என்று கேட்டார். இந்த இணைப்பால் தேனி மாவட்டத்துடன் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் கணிசமாக திமுக பக்கம் திரும்பும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அரசியல் இமேஜ் உயர்ந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சியின் வலிமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஓபிஎஸ்-இன் செயலை கண்டித்து கட்சி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தை முடிய 9 நாள் பாக்கி!! முடிவை சொல்லுவாரா ஓ.பி.எஸ்! தவெகவா? தனிக்கட்சியா? திமுகவில் ஐக்கியமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share