“திமுக + தேமுதிக கொள்ளையடிப்பதற்கான கூட்டணி”... ஓபிஎஸையும் விளாசி தள்ளிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...!
திமுக தேமுதிக கூட்டணியின் வெற்றி என்பது பூஜ்ஜியமாக முடியும்
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் திமுக விடியா ஆட்சியில் வீட்டு பில்லே சாட்சி என்ற பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேமுதிக திமுகவிற்கு சென்ற பின்னர் தேமுதிகவின் கடந்த கால கொள்கை, விஜயகாந்தின் பேச்சுக்கள், பிரேமலதா, விஜயபிரபாகர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அந்த பேச்சுக்களை பார்க்கும்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தேமுதிக கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல கொள்ளையடிப்பதற்கான கூட்டணி. அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சிய கூட்டணி
விடியா திமுக ஆட்சியால் மக்களுக்கு ஒன்றரை மடங்கு செலவீனம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வருவதற்கான வேலையை செய்கிறது, அதற்காக பணியாகவே தேமுதிகவை கூட்டணிக்குள் திமுக வளைத்து போட்டுள்ளது.எப்படி தேமுதிகவை திமுக வளைத்து என்ற வரலாறு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது
இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாய் செலவில் மருது சகோதரர்களுக்கு சிலை... திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!
மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டுள்ளார்கள், துன்பப்பட்டு துயரப்பட்டுள்ளார்கள். எதை சொல்லியும் மக்களை ஏமாற்ற முடியாது, கதையளக்கும் வேலையெல்லாம் இனிமேல் கதைக்கு ஆகாது. அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.வாக்காளர்கள் 100 பேரை சந்தித்தால் அதில் 90 பேர் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்பதெல்லாம் பகல் கனவு. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தொழிலாளர்கள் என அனைவரும் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு, நிதி நிலைமை மோசமானதுக்கு திமுகவின் நிர்வாக திறனற்றதே காரணம் .
திமுக அரசு திட்டமிட்டு பொய் சொல்லி கடன் வாங்கி அதில் லாபம் சம்பாதிக்கும் பணியை திமுக அரசு செய்திருக்கிறது.இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் கண்டதில்லை என மக்கள் பேசுகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி அற்புதமான கூட்டணி, மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ஒரு ஆன்மீக கூட்டணி, தேசிய நலனில் அக்கறையுடன் நல்ல அரசு அமைய போராடக்கூடிவ நல்ல கூட்டணி. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் அத்தனை தேமுதிக நிர்வாகிகளும் நொறுங்கி அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
தேமுதிக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கொள்கையிலிருந்து நிலைமாறி இன்றைக்கு திமுகவுடன் சேர்ந்து அதற்கான காரணங்களை சொல்லி பார்க்கிறார். அந்த காரணங்களை தேமுதிக நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. திமுக தேமுதிக கூட்டணியின் வெற்றி என்பது பூஜ்ஜியமாக முடியும்.
மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதிலளித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுகவை எதிர்த்துதான் அதிமுக உருவாக்கப்பட்டது, ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்கள் சுயநலவாதிகள் என தமிழக அரசியல் வரலாறு சொல்லும், சுயநலத்திற்காக அதிமுகவின் அரசையும் அதிமுக கட்சியையும் பிரயோகம் செய்து பேசக் கூடியவர்களுக்கு காலம் பதில் சொல்லும், தமிழக மக்கள் பதில் சொல்வார்கள் என்றார்.