"இது ஒன்னும் லாட்டரி வியாபாரம் இல்ல"..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பதிலடி..!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள் காரணமாக கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மட்டுமின்றி தொண்டர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்போடு வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றி கழகம் இருப்பதாகவும் யாருக்கும் ஆஃபர் கொடுத்து தாங்கள் அழைக்கவில்லை எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். இதற்கிடையில், அதிமுக குறித்த விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்சியை நடத்தும் அளவிற்கு தமிழக வெற்றி கழகத்தில் தொண்டர்கள் இல்லையா என்ற கேள்வி எழுப்பினார். குதிரை பேரத்தின் மூலம் அதிமுக தொண்டர்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழுப்பது ஏன் என்று கேட்டுள்ளார். அதிமுகவினரை விலை பேசி வாங்குவதற்கு இது லாட்டரி வியாபாரம் அல்ல என்று விமர்சித்துள்ளார். குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை கேட்க தயங்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!
தூய ஆட்சித் தருவேன் என தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வருமான விஜய் நாட்டு மக்களுக்கு கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பது தான் பிரதான வேலையா என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவிற்கு வந்து துணை பொதுச்செயலாளர் பதவி கேட்டவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் தொடருகிறீர்களா?... முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடுத்த எதிர்பாராத ரியாக்ஷன்...!