ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
ஜல்லிக்கட்டை அவமதித்துப் பேசிய தவெக எம்.எல்.ஏ-வை கண்டித்து செப்டம்பர் 3 அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றப் பேரவையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களைச் சீரழிக்கிறது என அநாகரிகமாகக் கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையாவையும், தவெக அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வியாழக்கிழமை காலை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிக்கையில், சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்த தவெக அரசு, மக்களுக்குப் பணியாற்றுவதை விடுத்து நாடகங்களை மட்டுமே அரங்கேற்றி வருகிறது; இந்நிலையில், சட்டமன்றப் பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி. கருப்பையா, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களைச் சீரழிக்கிறது எனப் பேசியிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் கடுமையான கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது; தவெகவினரின் இந்தத் தான்தோன்றித்தனமான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு உரிமை மீட்பில் அதிமுக அரசின் சட்டப் போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், 2014-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சீராய்வு மனு தாக்கல் செய்தார்; தொடர்ந்து 2017-ல் இளைஞர்களும் மாணவர்களும் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறப்போராட்டத்தை ஏற்று, அதிமுக அரசு அவசரச் சட்டம் இயற்றியதுடன், விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் நிரந்தரத் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மீட்டெடுத்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளிலும் அதிமுக அரசு தீவிரமாக வாதாடியதன் பலனாகவே 2023-ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை உறுதி செய்து வரலாற்றுத் தீர்ப்பளித்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!
எனவே, பாரம்பரிய வீர விளையாட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ மற்றும் தவெக அரசைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டங்களின் சார்பில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!