யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை விமர்சிக்கும் வகையில் தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்ட 'குடிகார குள்ளநரி' பேனர் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக்கு மத்தியில்தான் சர்ச்சைக்குரிய பேனர் இடம்பெற்றது. பேனரில் "அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி... இன்று அனாதையாக வந்து ஓலம் விடும் குடிகார குள்ளநரி" என வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. குள்ளநரி படத்துடன் பல மைக்குகள் இருக்கும் படமும், பின்னர் ஒரே ஒரு மைக் மட்டும் இருக்கும் படமும் இடம்பெற்றிருந்தன. மேலும், சிங்கம் (ஈபிஎஸ் என குறிப்பிடப்பட்டது) படத்தைப் பார்த்து குள்ளநரி ஊளையிடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பேனர் அதிமுக தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய மூத்த தலைவர்களை நேரடியாகக் குறிவைத்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தனர். பின்னர் எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீண்டும் எடப்பாடி அணியில் இணைந்தனர். எனினும், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணையும் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஏற்கெனவே நான்கு எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து வரும் நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இத்தகைய உள்கட்சி மோதல் நிலையில், தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வைத்துள்ள இந்தப் பேனர் கட்சியின் உட்பூசலை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எடப்பாடி தரப்பினர் இந்தப் பேனரை கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில், யாரை நோக்கி இந்த விமர்சனம் என்பது குறித்த விவாதம் அதிமுகவினரிடையே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!