கொங்கு பெல்ட் எங்களுக்கு கொடுங்க! அதிமுகவுடன் பாஜக போட்ட ரகசிய டீல்!
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) வலுப்படுத்த, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேற்று (அக்டோபர் 7) சந்தித்துப் பேசினார்.
இந்த 45 நிமிட சந்திப்பின் போது, கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி விரிவாக்கம் மற்றும் சீட் பகிர்வு விவாதங்களுக்கு அடிப்படையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம்: தேர்தல் தயாரிப்பு தீவிரம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்புகள், பூத் கமிட்டி ஆலோசனைகள் என அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி பணியாற்றி வருகின்றன.
இதையும் படிங்க: இதுதான் ப்ளான் மிஸ் பண்ணிடாதீங்க! இபிஎஸ்-யிடம் பாஜக தலைவர்கள் கொடுத்த ப்ளூ பிரிண்ட்!
குறிப்பாக, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த அணியை உருவாக்க, பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் என்டிஏவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகிப்பார் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார்.
ஆனால், கூட்டணியில் சில சவால்கள் உள்ளன. ஏற்கெனவே என்டிஏவில் இருந்த ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறினர். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவும், மாநிலங்களவை சீட் வழங்காததால் விலகியது. மேலும், பாமகவில் உள்ள உள் கட்சி பிரச்சினை காரணமாக நிலையற்ற தன்மை நீடிக்கிறது. இந்த சூழலில், என்டிஏவை பலப்படுத்தும் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது.
பாஜகவின் தேர்தல் தயாரிப்பு: பைஜெயந்த் பாண்டாவின் பங்கு
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழக தேர்தல் மேலிடப் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டாவை, இணைப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோலை பாஜக நியமித்தது.
பாண்டா, 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலிலும், கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் மேலிடப் பொறுப்பாளராகப் பணியாற்றி, கட்சிக்கு அமோக வெற்றி தேடித் தந்தவர். தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க இவர்களை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் (அக்டோபர் 6) சென்னை வந்த பைஜெயந்த் பாண்டா, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 10.45 மணி முதல் 11.30 மணி வரை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் நடந்த சந்திப்பில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார்.
சந்திப்பின் முக்கிய விவாதங்கள்
இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.,) கூட்டணி அமைப்பது, பிரச்சார வியூகம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
2021 தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, இம்முறை அதிக சீடுகளை கோரியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் (கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள்) அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு மண்டலம், தொழில் மற்றும் விவசாய சார்ந்த பகுதியாக இருப்பதால், பாஜகவின் தேசிய அளவிலான கொள்கைகள் அங்கு நல்ல பலம் தரும் என்பதால் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. சந்திப்பிற்குப் பின், நாகேந்திரன், தமிழக பாஜகவின் பிரச்சாரப் பயணத்தை அக்டோபர் 12 அன்று மதுரையில் தொடங்குவதாக அறிவித்து, பழனிசாமியை அழைத்தார்.
இந்த சந்திப்பு, அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தி, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஒற்றுமையான அணியை உருவாக்கும் முதல் படியாகக் கருதப்படுகிறது. சீட் பகிர்வு மற்றும் கூட்டணி விரிவாக்கத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தவெகவுக்கு TOUGH கொடுக்கணும்! பலத்தை காட்டணும்! இளைஞரணிக்கு உதயநிதி கொடுத்த சீக்ரெட் ஆர்டர்!