அஜித் கஸ்டடி மரணம்... வீரியமெடுக்கும் பிரச்சனை... அதிமுக - பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இணைந்து சிவகங்கை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள், கழுத்தில் ஆழமான காயம், உளவியல் அதிர்ச்சி, உட்புற ரத்தக்கசிவு ஆகியவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலம் தன் குடிமகனையே கொன்றுவிட்டது என்று வேதனை தெரிவித்து, காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், 24 லாக்கப் மரணங்கள் குறித்து விளக்கம் கோரினர்.
இதையும் படிங்க: #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!
இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது என்று சினிமா விமர்சனம் எழுதிய முதல்வர் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து, அஜித்குமார் மரண சம்பவத்தை கண்டித்து நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில், அஜித் குமார் கஸ்டடி மரணத்தை கண்டித்து அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலம் தன் குடிமகனையை கொன்று உள்ளது என்ற பதாகையை ஏந்தி அதிமுக மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முடக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பின் முதன்முறையாக இணைந்து நடத்தப்படும் போராட்டம் இது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அநியாயமாக போன உயிர்...! அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கிய அமைச்சர்... கதறி அழுத தாய்!