தமிழகத்தையே உலுக்கிய லாக்அப் மரணம்... 5 காவலர்களுக்கு சிறை...!
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் (30) உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகாமி (76) இவரது மகள் பேராசிரியர் நிகிதா (46). சிவகாமிக்கு உடல்நலம் சரியில்லாததால் டாக்டர்கள் ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்தனர். ஜூன் 27ம் தேதி ஸ்கேன் செய்வதற்காக சிவகாமி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகளை கழற்றி பர்சில் வைத்து துணிமணிகள் வைத்திருந்த கட்டைப்பையின் அடியில் வைத்து காரின் பின்புற சீட்டில் வைத்திருந்தனர்.
ஸ்கேன் செய்ய செல்லும் போது சிவகாமி மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்த பின் தான் ஸ்கேன் செய்ய வருவேன் என கூறியதால் நிகிதா தாயார் சிவகாமியை அழைத்து கொண்டு திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு 27ம் தேதி வெள்ளிகிழமை காலை 9.30 மணிக்கு காரில் அழைத்து வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்துள்ளார். சிவகாமியால் நடக்க முடியாததால் கோயில் அலுவலகத்தில் வீல்சேர் கேட்டுள்ளார். கோயில் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாவலர் அஜித்குமார் (30) வீல்சேர் கொண்டு வந்துள்ளார். அப்போது நிகிதா தாயாரை வீல் சேரில் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதால் காரை பார்கிங்கில் நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!
தரிசனம் முடிந்தபின் மீண்டும் காரை எடுத்துவர சொல்லி காரில் ஏறி திருமங்கலம் கிளம்பியுள்ளார். திருப்புவனம் அருகே செல்லும் போது நகையை எடுத்து அணிய கூறியுள்ளார். நகையை எடுக்க முயன்ற போது கட்டைப்பையில் துணிகள் சிதறி கிடந்துள்ளன. நகைகள் அடங்கிய பர்ஸ் மாயமாகி இருந்தது. மீண்டும் கோயிலுக்கு வந்து அஜித்குமாரிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை எனவே திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனில் மதியம் இரண்டு மணிக்கு புகார் அளித்துள்ளார். போலீசார் அஜித்குமாரை அழைத்து வந்ததுடன் சரி விசாரிக்கவே இல்லை. புகாருக்கு சிஎஸ்ஆர் ரசீதும் கொடுக்கவில்லை.
பெண்கள் இருவரும் தனியாக திருமங்கலம் வரை செல்ல¢வேண்டும், அமைதியாக இருந்தால் எப்படி என போலீசாரிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து இரவு 9மணிக்கு சிஎஸ்ஆர் ரசீது போட்டு அனுப்பி வைத்துவிட்டனர். மறுநாள் காலை ஜூன் 28ம் தேதி மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு ஏட்டு கண்ணன் தலைமையில் ஏட்டுகள் ராஜா, சங்கரமணிகண்டன், ஆனந்த், பிரபு ஆகியோர் அஜித்குமாரிடம் விசாரித்த போது தனக்கு கார் ஓட்ட தெரியாததால் நண்பர் அருண் காரை இயக்கியதாக கூறியுள்ளார். அருணை பிடித்து விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். பின் அஜித்குமார் தனது தம்பி நவீன்குமாரிடம் கொடுத்ததாக கூறவே அவரையும் அழைத்து விசாரித்தனர். அவரும் மறுத்து விடவே அஜித்குமார் நகையை கோயில் பின்புறம் கோசாலையில் வைத்திருப்பதாக கூறவே போலீசார் மாலை நான்கு மணிக்கு டெம்போ வேனில் அழைத்து சென்று தேடியுள்ளனர்.
அப்போது அஜித்குமார் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளார். திருப்புவனம், சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அஜித்குமார் இறந்த தகவல் பரவியதும் உறவினர்கள் 28ம் தேதி நள்ளிரவு வரை திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரை மாவட்ட எஸ்பி ஆஷிஷ்ராவத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஜூன் 29ம் தேதி காலை மடப்புரத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தியதுடன் ஆறு போலீசாரையும் கைது செய்ய வேண்டும், அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்தனர். திமுக மாவட்ட செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் திமுகவினர் அவர்களை சமாதானம் செய்து காரில் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்ல¢ முயன்றனர். ஆனால் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீஸ் வேனில் அஜித்குமார் குடும்பத்தினரை அழைத்துச் சென்று உடல் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் லாக்கப் மரணம் என சர்ச்சை கிளம்பிய நிலையில் கண்ணன், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு அவர்களை ஏடிஎஸ்பி சுகுமார் தலைமையில் போலீசார் திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து கைரேகை உள்ளிட்டவைகள் பதிவு செய்தனர். .
அதிகாலை நான்கு மணி வரை ஆவணங்கள் தயார் செய்தனர். ஏடிஎஸ்பி சுகுமார் போலீஸ் ஸ்டேசனின் அனைத்து விளக்குகளையும் அணைக்க உத்தரவிட்டார். பின் ஐந்து பேரையும் இருட்டில் வேனில் ஏற்றி திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர் செய்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. போட்டு பொளக்கும் அன்புமணி..!