கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!
போலீசால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்காக தான் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து, இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்கள் பிரபு. ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!
இதனையடுத்து, அஜித் குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டபோது அவர் காவல் நிலையத்தில் தான் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
காவலர்கள் கைது செய்யப்பட்டது கண் துடைப்பு என்று காட்டமாக பேசிய நீதிபதிகள், கொடூர சம்பவமாக இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர். இது சாதாரண கொலைகள்ள அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்றும் அஜித் குமாரின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை என்றும் கூறியுள்ளனர். அஜித் குமார் உடலில் 44 காயங்கள் இருப்பதாகவும் ஒரு மாநிலம் தனது குடிமகனையை கொலை செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். காவல்துறைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய நீதிபதிகள், 50 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாகவும், ஆதாரங்கள் சில அழிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் கூறினர். சிபிசிஐடி யின் சிறப்பு குழுவால் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், மாவட்ட ஆட்சியர் பொற்கொடியும் அமைச்சர் பெரியகருப்பனுடன் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: கஸ்டடி மரணம்... அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!