வேகமெடுக்கும் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை.. 5 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
அஜித் குமார் மரண வழக்கு விசாரணைக்கு ஆஜராக உதவி ஆணையரின் ஓட்டுநர், அஜித் குமார் சகோதரர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அஜித் குமார் என்ற இளைஞர் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
நீதிமன்றம் கூட இதனை உறுதி செய்தது. இந்த மரணம் திமுக ஆட்சியில் 25-வது காவல் நிலைய மரணம் எனவும், இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும், 2021 முதல் தமிழகத்தில் 24 காவல் மரணங்கள் நடந்ததாகவும், இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். அஜித்குமாரின் உடல் விரைவாக எரிக்கப்பட்டதாகவும், இது ஆதாரங்களை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீதிபதிகள் இது சாதாரண கொலை அல்ல அடித்தே கொலை செய்துள்ளார்கள்., கொடூர கொலை என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நேற்றே ஆவணங்களை கொடுத்தாச்சு..! அஜித் இறப்புச் சான்று குறித்து போலீஸ் விளக்கம்..!
தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவாக தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், அஜித் குமார் மரண வழக்கின் விசாரணைக்காக மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை புரிந்தனர். இந்த நிலையில், உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி வினோத்குமார் மற்றும் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் உள்ளிட்டோர் நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஜித் மரணம்: எதுக்கு கட்டப்பஞ்சாயத்து? யாரைக் காப்பாத்த துடிக்கிறீங்க? வறுத்தெடுத்த அதிமுக..!