×
 

"முடிவை நாளை சொல்கிறேன்!" - தேனியில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ்-இன் சஸ்பென்ஸ் பதில்..!!

“நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை; அதன் பிறகே கூட்டணி முடிவு!” - தேனியில் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கானக் கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தேனியில் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து போடி செல்வதற்காகப் புறப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அங்குத் திரண்டிருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்தக் கேள்விக்கு  பதில் அளித்த அவர்  கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நாளை (ஜனவரி 29) எனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளேன். அந்த ஆலோசனைக்குப் பிறகே கூட்டணி குறித்த எனது இறுதி முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, தை மாதம் முடிவதற்குள் கூட்டணி குறித்தத் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது. ஓபிஎஸ் அணியினர் தற்போது இரண்டு பிரதானத் தேர்வுகளைக் கையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஒன்று, ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது மற்றொன்று, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பது. இருப்பினும், டிடிவி தினகரன் போன்றதலைவர்கள் அவரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!

ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூண்களாக இருந்த ஆர். வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்றோர் சமீபத்தில் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் தற்போது தனது பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறார். மேலும், அவரது ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர். தர்மர், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளதும் ஓபிஎஸ் தரப்பிற்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய இக்கட்டானச் சூழலில், நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு, 2026 தேர்தல் களத்தில் அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாஜகவின் புதிய தேசியத் தலைவராகிறார் நிதின் நபின்: போட்டியின்றித் தேர்வு! நாளை பதவியேற்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share