அல்வா கொடுத்த பாஜக; ஆட்டம் போடும் தவெக! அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனல் பறக்கும் பேச்சு!
வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், பாதுகாத்துகொள்ளவே பாஜகவுடன் அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டணி வைத்துள்ளார், கடந்த சில மாதம் முன்னர் ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து பேசியதை பார்த்தால் புரியும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்.
சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” என்றப் பிரம்மாண்டப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளைத் துவம்சம் செய்தார். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை அமைச்சர் மிகக் கடுமையானச் சொற்களால் விமர்சித்தார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது உரையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியை ஒரு சுயநலக் கூட்டணி என்றும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டே கிடையாது என்றவர், இன்று தனது பதவியைத் தக்கவைக்கவும், தன் மீதான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவுமே பாஜக காலில் விழுந்துள்ளார் என்று அவர் சாடினார். எடப்பாடியுடன் கூட்டு வைத்தால் தூக்குப் போட்டுக்கொள்வேன் என்று சொன்ன டிடிவி தினகரன், இப்போது அதேக் கூட்டணியில் ஐக்கியமாகியிருப்பது நகைப்புக்குரியது. இவர்கள் 100 கோடி அபராதம் கட்டி வந்தவர்கள், இவர்கள் எங்களை ஊழல் ஆட்சி என்று சொல்ல என்னத் தகுதி இருக்கிறது? என்று ஆவேசமாகப் பேசினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்விதத் திட்டங்களையும் ஒதுக்காமல் இந்தியாவுக்கே 'அல்வா' கொடுத்துவிட்டார்கள் என்று கூறிய அமைச்சர், அதனை விளக்கும் விதமாகப் பொதுமக்களுக்கு அல்வா வழங்கினார்.
இதையும் படிங்க: திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!
திரைப்பட நடிகர்களின் அரசியல் வருகையைப் பற்றிப் பேசிய அமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைத் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்தார். வெள்ளைக் காக்கா ஒன்றைக் காஞ்சிபுரத்தில் பிடித்தார்கள். அதைப் பார்க்கக்கூடத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அதுபோலத்தான் ஒரு நடிகர் ரோட்டுக்கு வந்தால் மக்கள் வேடிக்கைப் பார்க்க வருவார்கள். அதற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவு காண வேண்டாம் என்று எள்ளி நகையாடினார்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றக் காட்சிகளில் நடித்துச் சின்னப் பிள்ளைகளைச் சீரழித்துவிட்டு, இப்போது சிறுபான்மையினரை ஏமாற்றப் பார்க்கிறார் இந்த நடிகர். உன்னால் மோடியை விமர்சிக்க முடியுமா? மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஓட்டுகளைப் பிரிக்கவே இவர் வந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். கட்சிக் கூட்டத்தில் டான்ஸ் ஆடும் இவரை எங்களுக்குப் போட்டி என்று சொல்வதே திமுக-வுக்குத் தான் அவமானம் என்று அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், தமிழகத்தின் கல்வித் தரம் அமெரிக்காவிற்கு இணையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால் நம்மைப் பிரிக்கப் பார்க்கிறது. அது முடியாததால் இப்போது செயற்கைக் கதாநாயகர்களை உருவாக்கிச் சிறுபான்மையினரை குழப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனால் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டத் தமிழக மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சிப் பாதையிலேயே பயணிப்பார்கள் என்று அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!