2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி.. சீக்கிரமே நல்ல சேதி வரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக, பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 377-வது வாக்குறுதியாக, உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு குறித்து நல்ல முடிவு விரைவில் வரும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 2,340 ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவதற்கான ஆணைகளை விரைவில் முதலமைச்சர் வழங்குவார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கழிவறையை சுத்தம் செய்யும் குழந்தைகள்.. சீரழியும் பள்ளிக்கல்வித்துறை! அண்ணாமலை கண்டனம்..!
இதையும் படிங்க: விஜய் சினிமாக்கு OK தான்.. ஆனா, அரசியல்ல?.. அமைச்சர் காந்தி ஓபன் டாக்..!