திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!
திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகன் அல்ல. மாறாக காமெடியனாக உள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுகவின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உண்மையான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், மக்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றும் வாக்குறுதிகளே நிரம்பியுள்ளன என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். அந்த அறிக்கையை “கதாநாயகனோ கதாநாயகியோ அல்ல; வில்லனாகவும் காமெடியனாகவும்” இருப்பதாக சாடினார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும், 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும் அன்புமணி முன்பே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த முறை திமுக வெளியிட்டுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் 2021 அறிக்கையில் இருந்தவையே என்று சுட்டிக்காட்டினார். அந்தப் பழைய வாக்குறுதிகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டி மீண்டும் அறிவித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். இது திமுகவின் தோல்வியின் அடையாளம் என்றும் அவர் விமர்சித்தார்.
அரசுப் பணியிடங்கள் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைத்த அன்புமணி, “2021-ல் அரசுத் துறைகளில் இருந்த 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதாகவும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்குவதாகவும் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது. இப்போது ஒன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாகும் என்று கூறி அவற்றை உடனடியாக நிரப்புவதாக புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியாத திமுகவுக்கு இந்த வாக்குறுதியை அளிக்க எந்தத் தகுதியும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலையாரை தரிசித்த சௌமியா அன்புமணி... மனமுருகி வழிபாடு..!!
தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்தும் அவர் தாக்குதல் தொடுத்தார். “தனியார் துறையில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றுவோம்” என்ற 2021 வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றார். ஆனால் இப்போது அதே 50 லட்சம் வேலை வாக்குறுதியை மீண்டும் அளித்து இளைஞர்களை ஏமாற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு இளைஞர்கள் இத்தகைய மோசடிகளை நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது கடும் கண்டனம் தெரிவித்த அன்புமணி, “ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட்டை ரத்து செய்வதற்கானதாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால் நீட்டை ரத்து செய்யவில்லை. தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறவும் தவறியது. இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்போது நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்துவிட்டு, ‘மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வோம்’ என்று புதிய வாக்குறுதி அளித்துள்ளது.
கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் இப்படி மக்களை ஏமாற்றுவது வெட்கக்கேடானது” என்றார்.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-வது முறையாக திமுக அளித்துள்ளதாகவும், 18 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கேற்றும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அன்புமணி சாடினார். தமிழை கட்டாயப் பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த முடியாத திமுக, தமிழையும் எட்டாவது அட்டவணையில் உள்ள 21 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவை என்று கூறினார்.
வேளாண்மைத் துறை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்துவோம்” என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் 2023-24ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளாகியும் இலக்கை எட்டாத திமுக, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதாக மீண்டும் வாக்குறுதி அளிப்பது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்றார்.
மொத்தத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதது என்றும், வளர்ச்சிக்கு வழிவகுக்காதது என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். 2021-ல் அளித்த 505 வாக்குறுதிகளில் 87 சதவீதத்தை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் புதிய வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருப்பதால், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத “ஆணி” மட்டுமே என்று கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!