மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!
தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு எந்த நிமிடமும் வெளிவரலாம் என்று கூறப்படுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திமுக அரசின் சுரண்டல் கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையை நடத்தவே வழியின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு அவர்களின் துயரத்தை அதிகரிக்கும் என்று கூறிய அன்புமணி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளின் கட்டணத்தை இப்போது உயர்த்துவதற்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தமிழக அரசு மட்டுமின்றி, தனியாரும் மக்களை சுரண்டவே இத்தகைய முடிவுகள் உதவும் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: இனியும் மாணவர்கள் மரணம் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தின் பின்னால் தமிழக அரசு ஒளிந்து கொள்ளக் கூடாது என்றும் பெரும்பான்மையான மக்கள் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தது என்றும் கேள்வி எழுப்பினார் .
தனியார் ஆம்னி பேருந்துகள் அநியாயமான கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவற்றுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய அன்புமணி, மக்களின் நலன் காப்பது தான் அரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி