அன்புமணியே தலைவர்! ஒரே குஷி தான்... பாமக அலுவலகத்தில் கொண்டாட்டம்
அன்புமணி தான் பாமகவின் தலைவர் என அறிவிக்கப்பட்ட நிலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.
இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராமதாஸ் நீக்கி இருந்தார். இதனால் அன்புமணிக்கு எந்தவிதமான பாதகமும் வராது எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் மூலம் சமீப காலங்களில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என கூறினார். பாமகவின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார். அதன்படி, 2026 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அன்புமணியை பாமக தலைவராக நீட்டித்து தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: அன்புமணி தான் பாமக தலைவர்… அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்! ராமதாஸ் தலையில் விழுந்த பேரிடி
அன்புமணிக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாது அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் என்றும் பாமக நிர்வாகிகளின் பதவி காலத்தையும் நீட்டித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பாமக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ராமதாஸ் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் END? ராமதாஸ் - அன்புமணி தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்...