முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!
ஆந்திரா தீவிரமாக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத் தொழில் துறை அமைச்சர் வெறும் ₹200 கோடியைக் கொண்டாடாமல் வேகமாகச் செயல்பட வேண்டும் என ரகுநாதன் எச்சரித்துள்ளார்.
அண்டை மாநிலமான ஆந்திரா சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதீத முனைப்புடனும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டு வருவதாகவும், வெறும் ₹200 கோடி முதலீடுகளை மட்டுமே பெருமையாகக் கொண்டாடி கொண்டிருக்காமல் தமிழகத் தொழில்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் இந்தியத் தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்நிலையில், அதே நிறுவனம் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் மாபெரும் முதலீடு செய்ய உள்ளதாக ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம், அடுத்த சில நாட்களிலேயே ஆந்திராவிற்கும் முதலீட்டை விரிவுபடுத்தியிருப்பது தமிழக முதலீட்டுக் கொள்கை மீதான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரகுநாதன், ₹10,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களின் முதலீடு என்பது குறைந்தபட்சம் ₹20,000 கோடி அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ₹250 கோடி அளவில் முதலீடு செய்வது மிகச் சாதாரணமானது. இதுகுறித்து தமிழக அமைச்சர் கீர்த்தனாவிடம் கேட்டபோது, ஆந்திரா மற்றும் தமிழக முதலீடுகள் தனித்தனியானது; இதனால் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை என விளக்கமளித்தார். இருப்பினும், ஆந்திரா குறிப்பாகத் தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளை மையமாக வைத்து முதலீடுகளைத் தன் பக்கம் ஈர்க்க முழு வீச்சில் வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!
மேலும், தொழில் முதலீடுகள் என்பது வெறுமனே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் திருவிழாவாக மட்டுமே நின்றுவிடாமல், அவை முழுமையான திட்டங்களாகக் களத்தில் மாற வேண்டும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும். தொழில்களுக்கான நிலங்களின் மதிப்பைக் குறைத்து வழங்கி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனங்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழக அரசு முழு முனைப்புடன் பரபரப்பாக இயங்காவிட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய பெருமளவிலான மெகா முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்தார்.
இதையும் படிங்க: தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!