×
 

ஆந்திராவில் கோர விபத்து: வால்வோ பேருந்து டயர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி!

நெல்லூரிலிருந்து ஹைதராபாத் சென்ற தனியார் பேருந்து மீது லாரி  மோதிய விபத்தில் டீசல் டேங்க் வெடித்து சிதறியதில், 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழிந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து, நள்ளிரவில் கோர விபத்தில் சிக்கியது. ஸ்ரீ வெல்லா அருகே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் டயர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. நொடிப் பொழுதில் பேருந்து முழுவதும் தீப்பிழம்பாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், மரண பயத்தில் அலறினர். சுதாரித்துக்கொண்ட சிலர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், அவசரகால கதவு வழியாகவும் வெளியே குதித்து உயிர் தப்பினர். இருப்பினும், தீ மளமளவெனப் பரவியதால், பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட மூன்று பயணிகள் வெளியே வர முடியாமல் உயிருடன் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பல பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது.

இதையும் படிங்க: ஆந்திராவில் தொடரும் பதற்றம்..!! 2வது நாளாக பற்றி எரியும் ONGC எண்ணெய் கிணறு..!!

விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திரா: ONGC எண்ணெய் கிணற்றில் பெரும் எரிவாயு கசிவு..!! கிராமங்களில் பீதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share