×
 

6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!

நாங்கள் கூப்பிடாமலேயே தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கட்சிக்கு வருவார்கள். 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வஉசி திடலில் நடந்தது. இதில் . முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், எந்த கொம்பனாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை தொட்டுப்பார்க்க முடியாது. தற்போது இந்த கழகத்தில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் இணைந்திருக்கிறார்கள். முதியவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் இன்னும் ஆறு மாத காலத்தில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலரும். புரிந்தால் புரிந்து கொள்ளட்டும். தெரிந்தால் தெரிந்து கொள்ளட்டும். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எப்போது ஓடலாம் என்று இருக்கிறார்கள். எங்களை காட்டி அவர்களை பயமுறுத்தி வருகிறார்கள். 

பழனியில் நாம் காத்து வைத்திருந்த கார் பார்க்கிங்கை ரகசியமாக பத்திரம் போட்டுள்ளார்கள். 2 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து பத்திரம் பதிவு செய்தது போல் செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பெரியவர்கள் தலையீடு இல்லாமல் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை. தளபதி அவர்கள் லண்டனில் இருந்து வந்ததும் ஒரு கேள்வி கேட்பார். உன்னால் பதில் சொல்ல முடியுமா? எந்த வகையில் மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளீர்களா? திமுகவும், அதிமுகவும் தப்பு செய்ததாக கூறுகிறாயே, இப்போது உன்னுடைய கதை என்ன?

மின்துறை அமைச்சர் தனது மனைவியை எப்படி திருவல்லிக்கேணிக்கு பணியிட மாற்றம் செய்து கொண்டு வந்தார். அமைச்சர் என்ற போர்வையில் தானே? அதிகார துஷ்பிரயோகமா? என்னைப்பார்த்து அவர் ரவுடி என்று சொல்கிறார். நான் ரவுடியா? நான் ரவுடிக்கு ரவுடி தான். என்னை தொட்டு பார்க்க முடியாது. நமது தலைவர் தோற்றது குறித்து பேசியதாக கூறி முதல்வருக்கு எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு திமிர் இருக்கும். இடைத்தேர்தலில் நீ எவ்வளவு பேசினாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்ற வரலாறை நாங்கள் உருவாக்குவோம்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

எம்ஜிஆருக்கும் உனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டுமா? சினிமாவில் ஒரு ஆட்டத்தை போட்டு டைரக்சன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து குதிரை பேரம் செய்தது நாங்களா?. உங்கள் தலைவர் பெண்களுக்கு என்ன செய்துள்ளார் என்று கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன் நான் திரிஷாவை சொல்லவில்லை என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக வை அழித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. ஏன் என்று சொன்னால் அது எம்ஜிஆர் அவர்கள், புரட்சி தலைவி அம்மா அவர்களால் வழி நடத்தப்பட்ட இயக்கம். தொண்டன் பார்த்துக் கொண்டே இருப்பான். அதிமுக தொண்டன் எங்களுடன் கை கொடுப்பான். அதிமுகவை ஒழிக்க பார்க்கிறீர்களா? திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஒழிக்க முடியாது.

கரூரில் 42 பேரை கொன்று விட்டு ஓடியது யார் தெரியுமா? அன்று நமது முதல்வர் உடனடியாக இவரை பிடித்து வைத்திருக்க வேண்டும். அன்றே அவரை கைது செய்திருக்க வேண்டும். அதனால் இன்று திமிராக பேசுகிறீர்களா? ஆட்சி உங்களுக்கு நிரந்தரமா? 
நாங்கள் கூப்பிடாமலேயே தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சிக்கு வருவார்கள். 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்றார் அவர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய மற்றும் நகர கழக திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்... காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share