SIR- ஐ எதிர்ப்போம்! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்ற முதல்வர் ஸ்டாலின்...
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சி.என். அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சென்னை மாகாணத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள், தமிழ்நாட்டின் மக்களால், குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால், ஒரு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இது அவரது பங்களிப்புகளை நினைவுகூரும் ஒரு விழாவாக மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளையும், சமூக நீதி, பகுத்தறிவு, மற்றும் தமிழர் உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றும் ஒரு நாளாக அமைகிறது.
1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்தியாவின் முதல் பிராந்திய அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர் அண்ணா. அவரது ஆட்சியில், தமிழ்நாட்டில் சமூக நீதி, கல்வி மற்றும் மொழி உரிமைகளுக்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தியதோடு, தமிழர் அடையாளத்தை வலுப்படுத்தின. இந்தக் கொள்கைகள் இன்றும் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி உறுதிமொழி ஏற்றார். முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் பின் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரிக்கு 5 மாஸ் அறிவிப்புகள்! எதிர்க் கட்சிகளுக்கு வைத்தெரிச்சல்... சூறையாடிய முதல்வர்
நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன் என்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் sirக்கு எதிராக நிற்பேன் என்றும் நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த விட மாட்டேன் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்