அண்ணா பல்கலை கோப்புகள் 3 மாதம் தேக்கம்! துணைவேந்தர் இல்லாததால் முடங்கியதா நிர்வாகம்?
பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படும் முக்கிய கோப்புகள் பல்வேறு அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் ஒப்புதலுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி நீண்ட காலமாக காலியாக இருப்பதால், முக்கிய நிர்வாக கோப்புகள் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் தேங்கி கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக பேராசிரியர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, பல்கலைக்கழகங்களில் இந்த முக்கிய பதவிகளை நிரப்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை கவனிக்க, உயர்கல்வித்துறை செயலர் அல்லது கல்லூரிக் கல்வி இயக்கக கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட மூன்று பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களே பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, துணைவேந்தராக இருந்த பேராசிரியர் வேல்ராஜின் பதவிக்காலம் 2024ல் நிறைவடைந்தது. அதன் பிறகு உயர்கல்வித்துறை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
இதனால், பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படும் முக்கிய கோப்புகள் பல்வேறு அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் ஒப்புதலுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில கோப்புகள் 2 முதல் 3 மாதங்கள் வரை தேங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜூன் மாதத்தில் தயாரிக்கப்பட்ட சில கோப்புகளுக்கு அடுத்த மாதத்தில்தான் ஒப்புதல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற தாமதங்களால் நிர்வாக பணிகள் மட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் புதிய திட்டங்கள் மற்றும் புத்தாக்க முயற்சிகளும் பாதிக்கப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக முடிவுகளை ஒருங்கிணைப்பு குழுக்கள் கவனிப்பது தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், நீண்ட காலம் அதே நடைமுறை தொடர்வதால் செயல்திறன் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!