×
 

சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நடைபெறும் பேரணியில் மரங்களை வளர்த்து பாதுகாப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, பசுமையான தமிழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட உள்ளன.

சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) அண்ணாமலை தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெறும் இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே பேரணியின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகே வீ த லீடர்ஸ் அமைப்பினரும் பொதுமக்களும் திரளுகின்றனர். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நிறைவடைகிறது. பேரணி முடிவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து சமூக முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்படை காரணங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம், மாரத்தான் மற்றும் இளைஞர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் மறைந்த நடிகர் விவேக் பெயரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஏரி, கால்வாய்களை தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளும் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2ஆம் தேதி கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்ணாமலை தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஆம் தேதி மதுரையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளும் தொடங்கப்பட்டன.

சென்னையில் நடைபெறும் பேரணியில் மரங்களை வளர்த்து பாதுகாப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, பசுமையான தமிழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதும் பேரணியின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண், நீர், காற்று ஆகிய இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அமைப்பின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிரடி அண்ணாமலை மிஸ்ஸிங்? We The Leaders-ல் நிர்வாகிகள் புலம்பல்! இளைஞர்களிடம் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share