×
 
☰

போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!

கிருஷ்ணகிரியில் 'வி தி லீடர்ஸ்' சார்பில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அண்ணாமலை கடனுதவி வழங்கினார்.

'வி தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பெண்கள் வளர்ச்சி மாநாடு கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கியது. அமைப்பின் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்து, குத்துவிளக்கேற்றி நிகழ்வை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மகளிர் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைவதை ஊக்குவிக்கும் வகையில், புதிதாகத் தொடங்கப்பட உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநாட்டின் வாயிலாக அண்ணாமலை நலத்திட்ட உதவிகளையும் வங்கிக் கடனுதவிகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. (KRP) அணையில் பெருந்தலைவர் காமராஜருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அணையைத் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டிய காமராஜரைத் தங்களது கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படும் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு, தாமதிக்காமல் அணை வளாகத்தில் அவரது சிலையை நிறுவ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் "WE THE LEADERS”..! ஆட்டத்தை ஆரம்பிக்கும் அண்ணாமலை.! முக்கிய அறிவிப்பு.!!

தொடர்ந்து தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், விளம்பரங்களுக்காகப் போட்டோஷூட் நடத்துவதாலோ, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதாலோ அல்லது அருங்காட்சியகங்களைத் திறப்பதாலோ மட்டும் ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிடாது என்றும், புதிய தொழிற்சாலைகள் உருவாகி வேலைவாய்ப்புகள் பெருகினால் மட்டுமே மாநிலம் உண்மையான முன்னேற்றத்தைக் காணும் என்றும் சுட்டிக்காட்டினார். 

அண்டை மாநிலங்களான கர்நாடகா 18 சதவீதமும், ஹரியானா 12 சதவீதமும் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ள வேளையில், தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தனிநபர் செலுத்தும் ஜிஎஸ்டி வரி குறைந்து எதிர்மறை வளர்ச்சி (Negative Growth) ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் இந்தியாவில் பொருளாதார வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியைப் பெருக்காவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் மூன்று இடங்கள் பின்தங்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

இறுதியாக, டெல்லியில் சர்ச்சைக்குரிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) விவகாரம் குறித்துப் பேசிய அவர், தங்களது இயக்கத்தின் இலக்குகளும் பயணமும் முற்றிலும் மாறுபட்டவை என்பதால், சிஜேபி கட்சிக்கு 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் ஆதரவு எப்போதுமே ஒருபோதும் இருக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்ற போதிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்ற போதே தங்களது ஆட்சேபனைகளை முன்வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: சிறார்களை காப்பாற்ற தவறியது யார்.? வீரமணி மட்டும் தானா.? பாலியல் வழக்கில் அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share