×
 

நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

3 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கிய விவகாரத்தில், தவெக அரசு நீதிமன்றத்தை நாடுவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள அண்ணாமலை, 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில் ஏழை எளிய மாணவர்களின் பாதிப்புகள் குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே புள்ளிவிவர விபரங்களை இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளார்; அதற்கு எனது நன்றிகள். மேலும், இந்த விவகாரத்திற்காகத் தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று அண்ணாமலை அவர்கள் தனது அடுத்தகட்ட அதிரடி வாதங்களை முன்வைத்துள்ளார்.

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதன் மூலம் நடப்பு கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து மொத்தமாக விலகியிருப்பது குறித்து அண்ணாமலை அண்மையில் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருந்தார். அதற்குத் தற்போதைய தவெக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் விளக்கம் அளித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை தற்பொழுது சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்களின்படி, இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் உரியப் பதிலை வழங்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இக்கல்லூரிகளுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான ஆட்சேபனை நடவடிக்கைகளை முந்தைய திமுக அரசு எடுக்கத் தவறியது ஏன்? அந்த மாபெரும் நிர்வாகத் தவறுக்குத் தற்பொழுது யார் பொறுப்பு? எந்தெந்த அலுவலர்கள் அல்லது உயர்மட்ட அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் நிர்வாக அலட்சியமா, அல்லது ஏதேனும் ஒரு பெரும் புள்ளியின் சுயநல அழுத்தத்தின் காரணமாக வேண்டுமென்றே செய்யப்பட்ட லஞ்சப் பிழையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பேருந்துகளில் தன்னிச்சையான கட்டண உயர்வு! தமிழக அரசுக்கு பெ. சண்முகம் கோரிக்கை!

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே இதற்கு இறுதித் தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இந்தத் திட்டமிட்ட அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக அரசின் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு தங்களது உள்கட்டமைப்பு உரிமைகளை இழந்து நிற்கின்றனர். எனவே, நீதிமன்ற நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், இந்த விவகாரத்தில் தவெக அரசு ஒரு முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான சட்டப்பூர்வ ஆக்ஷன் எடுக்க வேண்டும்; மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த இந்த விவகாரத்தை எவரையும் தண்டிக்காமல் அப்படியே கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை! ஈரோட்டில் அன்புமணி ராமதாஸ்  முழக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share