அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!
அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர் ராஜா, தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1972 இல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியில் உறுப்பினராக இருந்தவர். 2001-2006 ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர், மேலும் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிறுபான்மையினர் நலப் பிரிவின் முக்கிய தலைவராகவும், அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
அன்வர் ராஜாவின் அரசியல் பயணத்தில், பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி குறித்து அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். 2021 இல், பாஜக கூட்டணி மற்றும் இரட்டைத் தலைமை (எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்) குறித்து விமர்சித்ததற்காகவும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதற்காகவும், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், 2023 ஆகஸ்ட் 4 அன்று, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பிறகு, தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் எதிர்காலம் குறித்து தனது கருத்தை பகிரங்கமாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. அதிமுகவே தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும், அதற்கு எடப்பாடி பழனிசாமியே தலைவராக இருப்பார், என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து சந்திக்க உள்ள சூழலில் இவரது பேச்சு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளரூம், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அன்வர் ராஜா.